தமிழர்களின் உண்மையான சிவவழிபாடு எது?

உண்மையான தமிழர்களின் சிவவழிபாடு எது?

ஆணவம் நீங்கி அன்பு வடிவாக மாறி எல்லா உயிர்களையும் அன்பால் அரவணைத்து வாழும் போது வெளியில் உள்ள சிவனே நம் உயிரிலும் குடிகொள்கிறார் என்ற ஒரு உண்மை புரியும்.

சிவன் தமிழிற்கு தொண்டு செய்ய அனுப்பியதால் 3000 ஆண்டுகளுக் மேலாக இருந்து தமிழிற்கு தொண்டு செய்தார் திருமூலச் சித்தர். அவர் கூறுகிறார்:

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்நபின்
.அன்பே சிவமாக அமர்ந்து இருப்பாரே.

அந்த உள் இருந்து நித்தம் நடனமாடும் சோதி வடிவான ஈசனுடன் (பூரணத்துடன்) இணைவதே தமிழர்களின் சித்தர்களின் உண்மையான சிவ வழிபாடாகும்.

இதையறியாமல் எண்ணில் அடங்காத பாவம் செய்த உயிர்கள் நம்முள்ளும்(பிண்டம்) வெளியிலும் (அண்டம்) உள்ள இறைவனை அடையாமல் பாதை மாறிச் செல்கிறார்கள்.

திருமூலர்:
எண்ணிலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணறியாமல் நழுவுகின்றாரே..

தமிழர் முறையில் இறைவனை வழிபடுவது எவ்வளவு இலகுவான முறை தெரியுமா?

முடிந்தால் அன்பாய் ஒரு இலையை இறைவனுக்கு வையுங்கள். அதுவும் முடியாவிட்டால் நீங்கள் உண்ணும் போது பசியால் வாடும் உயிர்களுக்கு ஒரு கைப்பிடி உணவு கொடுங்கள். அதுவும் முடியாவிட்டால் அன்பாய் உயிர்களிடம் பேசுங்கள் பழகுங்கள்.

இதை விட உங்களுக்கு வேறு முறை வேண்டுமா..

திருமூலர்:

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறருக்கு இன்னுரைதானே.

உயிர் பக்குவம் அடையும் வரை வெளியில் உள்ள இறைவனை மட்டும் தொழுகிறோம். பக்கும் அடைந்த பின்னர் உள்ளேயும் வெளியேயும் இறைவனைத் தொழுகிறோம்.

சிவபெருமான் மூன்று நிலைகளில் இருந்து நம்மை வழிநடத்துகிறார்.

அருவமாக (உருவம் இல்லாத நிலை ) உள்ள போது அவர் சிவம் சத்தி நாதம் விந்துவாக உள்ளார். இந்த நிலைக்கு சிவன் என்றும் பெயர்.

அருவுருவமாக உள்ளபோது சிவலிங்கமாக உள்ளார்.

உருவமாக உள்ளபோது மகேசுவரனாக உள்ளார். இந்த நிலையில் 25 உருவங்களை நமக்காக எடுக்கிறார்.

இந்த பழமையான மூத்த தமிழர்களின் சைவ சமயத்தில் சாதிகள் இல்லை. யாரும் இறைவனை தமது கைகளால் தொட்டுத் சிவபெருமான் உருவாக்கிய தமிழில் வழிபடலாம்.

உள்ளிருக்கும் சிவனை வழிபடும் வழிமுறைகளைப் பின் பற்றும்போது மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியானவள் உச்சம் தலை வரை பயணிப்பாள். அப்போது காதில் ஓசைகள் கேட்கும் அண்ணாக்கின் வழியாக தேன் போன்ற அமுதம் சொரியும். அதன் பின்னர் எங்கும் நடனம் புரியும் நம் இறைவனை உள்ளேயும் வெளியேயும் நிரந்தரமாக பார்க்கும் நிலை கிடைக்கும். இந்தக் கால கட்டங்களில் நிறையச் சித்துக்கள் கிடைக்கும். இந்தச் சித்துகளில் மயங்கும் போது அவை நமக்கு முத்தி அடையவிடாமல் தடைக்கல்லாக மாறிவிடும். அதையும் தாண்டிப் பயணிக்கும் போது அந்த சோதி வடிவான இறைவனே நம் வினைகளையும் பிறப்புகளையும் அறுத்து சித்தனாக்கி சிவமாக்கி தன்னுள் நம்மையும் இணைத்துக் கொள்வார். இதுவே நிரந்தர முத்தியாகும்.

இந்த உண்மையையும் அடையும் முறையையும் சிவனே கடலுக்குள் மூழ்கிய குமரிக்கண்டத்தில் 60 000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுக்கும் சித்தர்களுக்கும் தந்தார். உண்மையான வேதங்களும் ஆகமங்களும் குமரிக்கண்டத்தில் தமிழில் உருவாகி அழிந்து விட்டன.

ஈசனை அடையும் இந்த வழிமுறையைக் கூறும் ஒரு மொழி என்றால் அது தமிழ்தான்.

அப்படி என்றால் எப்படி தமிழ் என்ற இறை மொழியுடன் சேர்த்து தமிழர்களும் கோயிலின் கருவறையை விட்டு வெளியே வந்தார்கள்?

எப்படிக் குறை மொழியான சமற்கிருதமும் ஆரியர்களும் கோயிலின் கருவறையை ஆக்கிரமித்து நம்மைத் தீண்டத்தகாதவர்களாக மாற்றி வெளியே தள்ளினார்கள்?

ஆரியர்கள் கிட்டத்தட்ட கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை போரில் வென்று சிந்துவெளிவரை இருந்த தமிழர் நிலங்களை வென்று தம் கைவசப் படுத்தினார்கள்.
பின்னர் கி.மு 300 முதல் கி.பி 200 ஆண்டளவில் சமற்கிருத மொழி உருவானது. அதன் பின்னர் தான் நமது பழந் தமிழில் இருந்து எழுத்துகளை எடுத்து சமற்கிருதத்த எழுத்து உருவானது.

அதன்பின் தமிழில் இருந்த மூல நூல்களை அழித்து விட்டு அதில் இருந்த உண்மைகளை தமக்குச் சார்பாக மாற்றி சமற்கிருதத்தில் எழுதினார்கள். தற்போது உள்ள நிறைய புராண நூல்களையும் வேதங்களையும் இப்படித்தான் மாற்றினார்கள். தம்மை உயர்த்தியும் நம்மைத் தாழ்தியும் காட்டுவதற்காக சாதிகளை சமயத்தின் பெயரால் உருவாக்கி எம் தலையிலேயே புகுத்தினார்கள்.

வேதங்களில் சிவபெருமானை கெட்டவனாகவும் கள்ளவர்களின் தலைவனாகவும் சித்தரித்தார்கள்.
பின்னர் தமிழர்களின்ஆதிச் சைவசமயத்தில் சில மாற்றங்களைச் செய்து தம்முள் உள்வாங்கி இப்போது உள்ள ஆரிய வழிபாட்டு முறையாக மாற்றினார்கள்.

கி.பி 250 ஆண்ட பல்லவர்கள் மேலும் நிறைய இதுபோன்ற சதிகளை செய்து தமிழையும் தமிழர்களையும் கோயில் கருவறையில் இருந்து வெளியேற்றி ஆரியர்களை உள்ளே புகுத்தினார்கள். இவர்கள் தான் தற்போதைய தமிழில் இருந்து எடுத்த எழுத்துக்கள் மூலம் கிரந்தம் என்ற எழுத்துக்களை உருவாக்கினார்கள். எழுத்தில்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்கு இந்தக் கிரந்த எழுத்தைப் பாவித்தார்கள். கிரந்தம் என்பது மொழி இல்லை. எழுத்தின் பெயர்தான் தற்போது உள்ள கிரந்தம்.

மேலே உள்ள உண்மைகளைத்தான் சித்தர்களும் வரலாற்று நூல்களும் வலியுறுத்துகின்றன.

பொய்களையும் ஏமாற்று வேலைகளையும் நம்பி தமிழர்களின் உண்மையான சிவ வழிபாட்டை மறந்து வேறு பாதையில் பயணிக்காமல் உண்மையையும் தமிழர்களின் தொன்மையையும் பாதுகாப்போம்.

வாழ்க தமிழ் வாழ்க சிவ வழிபாடு

3 Comments on "தமிழர்களின் உண்மையான சிவவழிபாடு எது?"

  1. அன்பு | April 6, 2019 at 12:27 pm | Reply

    எல்லாம் சிவன் செயல்

  2. very nice

  3. anbe sivam, oliye sakthi

Leave a comment

Your email address will not be published.


*